அத்தியாயம் 50

 

“ரொம்ப பயமா இருக்கு ங்க... உங்க நெஞ்சுல என்னை வச்சுக்கோங்க ப்பா.. எனக்கு எந்த பயமும் இருக்காது... என் தனிமையை பார்த்து தானே முன்னாடி ஊட்டிக்கு என்னை தேடி வந்தீங்க. இப்பவும் நான் தனியா தான் இருக்கேன். எழுந்து வாங்கங்க.. என்னவோ பாதுகாப்பு இல்லாத மாதிரியே இருக்கு” என்றவளின் கண்ணீர் அவனது முகத்தில் தெரித்தது.

“எப்போ கண் முழிச்சு என்னை பார்ப்பீங்க சிங்கன். ஏற்கனவே என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சந்தேகம் வந்திடுச்சு போலங்க.”

“டாக்டர் கிட்ட இன்னைக்கு கூட என் வயித்துல பேபி இருக்கான்னு அழுத்தமா கேட்டு இருங்காங்க. இத்தனைக்கும் நான் வாந்தி மயக்கம் எதுவும் எடுக்கல. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே போகும்னு தெரியலங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”

“வயித்து பிள்ளையை இவங்க கிட்ட இருந்து என்னால மறைக்க முடியுமான்னு தெரியல. அதனால நாளைக்கு மருந்து வந்து நீங்க குணம் ஆனா ஓகே. அப்படி இல்லன்னா உங்களை தூக்கிக்கிட்டு நான் இந்த நாட்டை விட்டே போகப்போறேன். எனக்கு வேற வழி இல்லங்க. உங்களையும் உங்க மகனையும் காப்பத்தணும். எங்க வீட்டு ஆட்கள் ஏங்க அப்பாவை மீறி யாரும் உதவிக்கு வர மாட்டாங்க. அதனால யாருக்கிட்டயும் சொல்லாமல் நாம கிளம்பிடலாம்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளின் பின்னந்தலையில் ஏதோ வந்து பலமாக மோதியது.

வலி உயிர் போனது.. “அம்மா” என்று பின்னந்தலையை பற்றிக் கொண்டாள்.

ஒற்றை நொடியில் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு திரும்பி பார்க்க அங்கே சுந்தரமும் கண்ணனும் கையில் உருட்டு கட்டையை வைத்துக் கொண்டு அவ்வளவு ஆக்ரோஷமாக நின்று இருந்தார்கள்.

அவர்களை அங்கு அந்த நிமிடம் எதிர் பார்க்காதவளுக்கு உயிரில் நீர் வற்றிப் போனது போல ஆனது. நெஞ்சே வெளில வந்து துடிப்பது போல இருக்க வேகமாய் தன்னவனை மறைத்தது போல எழுந்து நின்றுக் கொண்டாள்.

“எப்படி இவ்வளவு சீக்கிரம் தெரிந்துக் கொண்டார்கள்” என்று உள்ளுக்குள் பயந்துப் போனாள்.

அவள் எழவும் அவளின் வயிற்றில் இருந்த ராசசிங்கனின் கை துவண்டு படுக்கையில் விழுந்தது.

“ஏன் ப்பா?” என்று அவள் அதிர்ந்து அவர்களிடம் கேட்க,

“ஏன்டி ஓடுகாலி நாயே... எவ்வளவு தைரியம் இருந்தா எங்க கண்ணையே மறைச்சு இத்தனை நாள் நீ ஆடிட்டு இருப்ப... இவனை புடிக்காது புடிக்காதுன்னு இங்க உட்கார்ந்து இவன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கியா? எவ்வளவு நெஞ்சழுத்தம்டி உனக்கு. இவன் இருக்கிற இடம் தெரிஞ்சும் வாயை திறக்கவே இல்லைல்ல நீ..” என்று கேட்ட சுந்தரம்

அவளின் வயிற்றை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையில் பெண்ணவள் அடிவயிறே கலங்கிப் போனது. “அவனோட வாரிசை வயித்துல வச்சுக்கிட்டு என்னாம்மா எங்கக்கிட்ட கதை அளந்த. இரு இவங்க ரெண்டு பேருக்கும் நான் முடிவு எழுதுறேன்” என்று கட்டையை ஓங்கி அவளின் வயிற்றில் அடித்தார்.

அதை எதிர் பார்க்காதவள்,

“அம்மா” என்று அதிர்ந்து நிற்க, அவளின் வயிற்றில் வலி கொஞ்சம் கூட எடுக்கவில்லை. கண்களை மூடி இருந்தவள் பட்டென்று திறந்து பார்க்க, அந்த அடி மொத்தத்தையும் யுகேஷ் வாங்கி இருந்தான் பாய்ந்து வந்து.

கட்டைக்கும் ஏந்திழையாளுக்கு நடுவில் அவன் வந்து நின்றிருந்தான்.

“ண்ணா” என்று அவள் கதற,

“ஒன்னும் இல்ல பாப்பா. உனக்கும் சரி உன் வயித்துல வளர்ற என் மருமவனுக்கும் சரி ஒன்னும் ஆக விட மாட்டேன்” என்று சொன்னவன்,

தன் தந்தைமார்களை உருத்து விழித்தான்.

“ஒழுங்கா நீ நகர்ந்து போயிடுடா.. இல்லன்னா பெத்த மகன்னு கூட பார்க்க மாட்டேன். அடிச்சு சாவடிச்சுடுவேன்” என்று சுந்தரம் சொல்ல,

“உங்களுக்கு தான் மனசுல ஈரமே இல்லையே. பிறகு நீங்க பெத்த மகன்னு தான் பார்ப்பீங்களா இல்ல கரு சுமந்து இருக்கிற மகள்னு தான் பார்பீங்களா? அரக்கன் தானே நீங்க எல்லாம்” என்று பதிலுக்கு அவர்களை பேசினான் யுகேஷ்.

“யுகேஷ்... நீ ஒதுங்கி போ” என்றார் கண்ணன் மிக அழுத்தமாக.

“போக முடியாது பெரியப்பா அவ என்னோட தங்கச்சி.. அவ வயித்துல இருக்க பிள்ளைக்கு நான் தாய் மாமன். உங்களை அவளால நெருங்கவே முடியாது. அதுக்கு நான் விட மாட்டேன்” என்று கர்ஜித்தவனை பின்னிருந்து சுந்தரம் தாக்கினார்.

அதை எதிர்பார்க்காதவன் “ப்பா” என்று அதிர,

“நான் தான் சொன்னனே... ஒதுங்கிபோன்னு. நீ கேட்கல... அனுபவி” என்று சொன்னவர் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அவனை சுதாரிக்கவே விடாமல் மேலும் மேலும் அவனது மண்டையிலே கட்டையால் அடி போட்டார். அதில் அவனது மண்டை உடைந்து உதிரம் அவனது முகத்தில் வழிந்தது.

“அய்யோ பெத்த பிள்ளையையே இப்படி போட்டு அடிக்கீறீங்களே.. நீங்க எல்லாம் மனுசனா இல்ல மிருகமா.. என் பிள்ளைங்க ரெண்டும் என்ன பண்ணுனுச்சுங்க ஏன் இப்படி என் பிள்ளைகளை வதைக்கிறீங்க.. கடவுளே உனக்கு கண்ணு இல்லையா? என் பிள்ளைகளை யாரவது வந்து காப்பாத்துங்களேன்” என்று தேவகி கதறிக் கொண்டே ஓடி வந்து யுகேஷை தாங்க வர அடியாட்கள் அவரை விடவே இல்லை.

“நீ உள்ள வராத தேவகி. இல்லன்னா பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன். நீயும் தேவையில்லாம பிறகு செத்துப் போயிடுவ” என்ற தன் அப்பாவை பார்த்த ஏந்திழையாளுக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது.

இங்கே நடக்கும் கலவரத்தில் அரவம் உணர்ந்து டியூட்டி டாக்டர்ஸ் நர்ஸ் எல்லோரும் வந்து விட்டார்கள். செக்யூரிட்டிக்கு சொல்லி விட அந்த இடத்தில் அத்தனை பேரும் சூழ்ந்து விட்டார்கள். ஏந்திழையாள் வீட்டு ஆட்கள் அப்பொழுது தான் எல்லோரும் அவளை பார்த்து விட்டு கிளம்பினார்கள். அதனால் தேவகியும் யுகேஷையும் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

கீர்த்தியின் அம்மா மருத்துவமனையிலே இருந்ததால் அரவம் கேட்டு வேகமாய் வந்து விட்டார். ஆனால் அவராலும் ஏந்திழையாளை நெருங்க முடியவில்லை. காரணம் சுந்தரம் ஏவி இருந்த அடிஆட்கள் அந்த இடத்தையே சுற்றி வளைத்து இருந்தார்கள். அவரை மட்டும் இல்லாது வேறு யாரையுமே விடவில்லை.

அதிர்ந்து இருந்த மகளிடம் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல், ஒரு தந்தை சொல்லக் கூடாத சொல்லை சொல்லி அவளை எச்சரித்தார். “ஒழுங்கா உன் வயித்துல இருக்கிற குழந்தையை கலைச்சிக்க... இல்லன்னா இந்த கட்டையால அடி அடின்னு அடிச்சு உன் வயித்தை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். எது வசதி” என்று சுந்தரம் முழு அரக்கனாய் நின்றார் தன் மகளின் முன்பு.

“வேணாம் ப்பா ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க... எங்களை வாழ விடுங்க... உங்க வீம்புக்கும் உங்க இன வெறிக்கும் எங்களை பலி யாக்கிடாதீங்க.. அந்த பிஞ்சு உங்களை என்ன செய்தது... அது பாவம் ப்பா. இந்த ஒருமுறை மட்டும் எங்களை விட்டுட்டுங்க. எங்க வாழ்நாள் முழுக்க உங்க கண்ணுல படாம எங்காவது போயிடுறோம்... எங்காவது ஒரு மூலையில வாழ்ந்துக்குறோம்...” என்று கையெடுத்து கும்பிட்டவளை எட்டி உதைக்கப் போனார் கண்ணன்.

“ஓ... தெரிஞ்சிடுச்சா? ஆமா எங்களுக்கு இன வெறி தான்... யார் வீட்டு குடும்பத்துல யார் வீட்டு வாரிசு உருவாகுறது. அதுக்குன்னு ஒரு தகுதி தராதரம் வேணாம்.. எங்கோ கிடந்த அனாதை அவன். அவனுக்கு பரம்பரை பரம்பரையா வந்த என் வீட்டு பெண் கேட்குதோ... அது தான் வஞ்சம் வச்சி கருவறுக்க வந்தோம். கண்டவனோட வாரிசையும் எங்க வீட்டு பெண் சுமக்கக் கூடாது. அதுக்கு அவ செத்து போறதே மேல்” என்று வெறிப் பிடிக்க சொன்னவர்,

“சுந்தரம்” என்று கையை நீட்ட, பெரிய உறுதியான உருட்டுக் கடட்டையை எடுத்து தன் அண்ணனின் கையில் வைத்தார் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல்.

அவர் அப்படி செய்யவும் நெஞ்சில் இருந்த கொஞ்சம் நஞ்சம்  நம்பிக்கையும் மொத்தமாக போய்விட்டது ஏந்திழையாளுக்கு. அவளின் வயிற்றில் குறி வைத்து அடிக்க வர,

“இவளை எப்ப வேணாலும் போட்டு தள்ளலாம். முதல்ல அங்க படுத்து இருக்கிறவனை போட்டு தள்ளுவோம் அண்ணா. எவ்வளவு ஆட்டம் காட்டி இருக்கிறான் நமக்கு. அவனை சும்மா விடுறதா... முதல்ல அவனை ஒரு வழியாக்கிட்டு பிறகு இவக்கிட்ட வருவோம். இவ ஏங்க போயிடுவா... இவ வயித்துல வளர்ற வாரிசுக்கு இன்னும் சில நொடிகள் உயிர் பிச்சை போடுவேம்” என்று ஆக்ரோஷமாக சொன்ன தம்பியின் பேச்சை கேட்டு ராசசிங்கனை அடிக்கப் போக,

“அய்யோ வேணாம் பெரியப்பா.. அவரை விட்டுடுங்க.. அவருக்கு பதிலா எங்களை வேணா கொன்னுடுங்க... அவரை ஒன்னும் செய்திடாதீங்க... அவரு நல்லா இருக்கணும். அவர் வாழ்க்கையில பெருசா எதுவும் ஆசை பட்டதே இல்லை என்னை தவிர. என்னை ஆசை பட்டதுனால தான் அவருக்கு இப்போ இந்த நிலை. அதனால என்னையும் என் பிள்ளையையும் என்ன வேணா செஞ்சுக்கோங்க. அவரை மட்டும் விட்டுடுங்க” என்று அவரின் கையை பற்றிக் கொண்டாள் இழையாள்.

“ஒழுங்கா தள்ளி போயிடு இல்ல மகன்னு கூட பாவம் பார்க்க மாட்டேன். எங்களோட பலி வெறி மொத்தமும் அவன் மேல மட்டும் தான். இடையில நீ வந்து நின்ன உன் புருசனுக்கு முன்னாடி நீயும் உன் பிள்ளையும் போயிடுவீங்க...” என்று இழையை எச்சரித்தார்.

“நீங்க என்ன சொன்னாலும் சரி நான் உயிரோட இருக்கிற வரை அவரை நெருங்க உங்களை விட மாட்டேன் பெரியப்பா” என்று ராசசிங்கன் படுத்து இருந்த கட்டிலுக்கும் கண்ணனுக்கும் நடுவில் வந்து நின்றாள் பெண்ணவள்.

அதுவரை அழுது புரண்டு துடித்து தவித்து கெஞ்சிக்கொண்டு இருந்தவள், ராஜசிங்கனை அடிக்கப் போகவும் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டவள் வீர மங்கையாய் நிமிர்ந்து நின்றாள்.

அவள் அப்படி நிற்கவும் இவர்களுக்கு இன்னும் வெறி வர அவளது வயிற்றிலே ஓங்கி அடிக்க பாய்ந்தார்கள் அண்ணனும் தம்பியும்.

“டேய் அரக்கனுன்களா அவளை விடுங்கடா... இன்னும் உங்க இன வெறிக்கு எத்தனை பேரை தான் பலி கொடுப்பீங்க.. நீங்க எல்லாம் மனுசனுங்க தானா... ச்சீ இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி ஜாதி வெறியை கட்டிக்கிட்டு இருப்பீங்க. உங்களுக்கு ஒரு முடிவு வராதா?” என்று ஆதங்கத்துடன் தன்னை பிணைத்து வைத்து இருந்த அடியாட்களின் கைகளில் துள்ளினார் கீர்த்தியின் அம்மா.

“ஏய் டாக்டரு சும்மா வாயை மூடிக்கிட்டு இருக்க. அதை விட்டுட்டு சும்மா துள்ளிக்கிட்டு இருந்த நீயும் இவங்களோட சேர்த்து மேல போவ வேண்டியது வரும்...” என்று எச்சரித்தார் கண்ணன்.

செக்யூரிட்டிஸ் போலீஸ்க்கு போன் பண்ண போக, எல்லாமே முடக்கி போட்டு இருந்தார்கள் அடியாட்கள். மறைமுகமாக இருந்த ராசசிங்கனின் ஆட்கள் அலெர்ட் ஆகி உள்ளே வருவதற்குள் எல்லாமே கை மீறி இருந்தது.

“அவ மேல கை பட்டுச்சு உங்க உயிர் உங்களுக்கு சொந்தமில்லை... ஞாபகம் வச்சுக்கோங்க” என்று மருத்துவர் எச்சரிக்க,

“என்ன டாக்டரம்மா ரொம்ப தான் துள்ளுற... அவ ஏங்க பொண்ணு.. அதோட நாங்க யாருன்னு தெரியுமா? தெரியாம துள்ளாத... இருக்கிற இடம் தெரியாம அளிச்சிடுவோம்..” என்றார் சுந்தரம்.

“ஏன் தெரியாம உங்களை பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். பாவம் உங்களுக்கு தான் என்னை தெரியாது...” என்றார் அவர்.

“நீ” என்று அண்ணனும் தம்பியும் அவரை கூர்ந்து பார்க்க அவரை சுத்தமாக அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.

“என்ன பார்க்குறீங்க உங்க முதல் தங்கச்சியோட உயிர் தோழி... மிச்செஸ் சோபனா.. என்னை நீங்க பார்த்தது இல்லை. ஆனா உங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும். என் தோழியை உயிரோட சாகடிச்சு அவ கணவனை அவ கண்ணு முன்னாடியே அரக்கத் தனமா கொன்னதும் எனக்கு தெரியும்” என்றார் அவர் ஆக்ரோஷமாக.

Comments

Popular posts from this blog

அத்தியாயம் 16